Run World Media: குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - கும்பம்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 3, 2018

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - கும்பம்நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம், சித்தி நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் நிறைந்த சித்த யோகத்தில், செவ்வாய் ஓரை முடியும் தருணத்தில், ஏழாம் சாமத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்யகால வர்ஷ ருதுவில், இரவு 10 மணிக்குச் சூரிய உதயம் 39.55 நாழிகைக்கு, ரிஷப லக்னத்திலும் நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும் வேத உபநிஷதங்களுக்குரிய மெய்ஞ்ஞான கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்கிறார்.
13.03.2019 முதல் 09.04.2019 வரை அதிசாரமாகவும், 10.04.2019 முதல் 18.05.2019 வரை வக்ர கதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.


செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் குரு வந்து அமர்வதால் ரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் பாதிப்படையும். ரசாயனத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்படும். உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், மாசுக்கட்டுப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். மருத்துவர்களுக்கு வருமானம் அதிகமாகும்.
சூறாவளிக் காற்றுடன் கனமழை பொழியும். புதிய புயல் சின்னங்கள் உருவாகும். புயலால், இடிகளால் பேரழிவு உண்டு.காலப்புருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால் ரியல் எஸ்டேட் சுமாராக இருக்கும். மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள், அடித்துச் செல்லப்படும். நாட்டின் கடன் அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். இனி, பனிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.

கும்பம்

 

புரட்சிகரமான முடிவும், தொலை நோக்குச் சிந்தனையும் கொண்டவர்களே, மந்திரியாக இருந்தாலும் மனத்தில் பட்டதைப் பளிச்செனப் பேசுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக 9-ம் வீட்டில் அமர்ந்திருந்து சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றித் தந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்களின் 10-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் நீங்கள் கொஞ்சம் நிதானித்துச் செயல்பட வேண்டும்.
சிலர் உங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. உத்தியோகம், பதவி, கவுரவத்துக்குப் பங்கம் வருமோ என்றெல்லாம் கலங்க வேண்டாம்! அவ்வப்போது தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உங்கள் திறமையையும் உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயத்தையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. தோல்விமனப்பான்மையால் மன இறுக்கம் உண்டாகும்.

உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். தன்னம்பிக்கை குறையும். முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். உறவினர்களில் சிலர் மதிக்காமல் போவார்கள்.  குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் சமயோஜிதப் புத்தி வெளிப்படும். சாதுர்யமாகவும், இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள்.
குடும்பத்தில் அமைதி நிலவும். மழலை பாக்கியம் கிடைக்கும். குரு, சுக வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மோதல்கள் விலகும். அவரைச் சிரமப்படுத்திய  நோய் குணமாகும். வீடு, வாகனம் வாங்க வங்கிக்கடன் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் புரிந்துகொள்வார்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
பழைய கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். சங்கம், இயக்கங்களில் கவுரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள்.


04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். என்றாலும் செலவுகளும் வேலைச்சுமையும் இருக்கும். மூத்த சகோதரர் வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டாகும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள், மொழியினர், மாநிலத்தவரால் ஆதாயமடைவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.
 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்துக்குச் செல்வதால் பழைய கடனைத் தீர்க்கப் புது வழி பிறக்கும். பிள்ளைகளால் சொந்தபந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். மகளின் பிடிவாதக் குணம் மாறும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும்.
பழைய உறவினர், நண்பர்கள் வீட்டுக்கு வருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 11-ம் வீட்டில் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வம், செல்வாக்குக் கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும்.


10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திடீர்ப் பயணங்களும் செலவுகளும் துரத்தும். தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வரும்.
வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். இடையிடையே பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.
வியாபாரத்தில் பெரியளவில் யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டுக் கடையை இடமாற்றம் செய்வீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புதிய தொழில், முயற்சிகளில் இறங்க வேண்டாம்.
10-ம் வீட்டில் குரு அமர்வதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். விரும்பத்தாக இடமாற்றமும் இருக்கும். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளுடன் பணிந்து செல்லவேண்டும். எதிர்பார்த்த இடமாற்றம், சம்பளம் சற்று தாமதமாகிக் கிடைக்கும்.


இந்த குருமாற்றம் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிய வைப்பதாகவும், சாதிக்க வேண்டுமெனில் சகிப்புத் தன்மையும், விடாமுயற்சியும் அவசியம் என்பதையும் அறிய வைக்கும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை சென்று வணங்குங்கள். கொள்ளுப்பயிறைத் தானமாகக் கொடுங்கள்.

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்