Run World Media: குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - மகரம்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 3, 2018

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - மகரம் 
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம், சித்தி நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் நிறைந்த சித்த யோகத்தில், செவ்வாய் ஓரை முடியும் தருணத்தில், ஏழாம் சாமத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்யகால வர்ஷ ருதுவில், இரவு 10 மணிக்குச் சூரிய உதயம் 39.55 நாழிகைக்கு, ரிஷப லக்னத்திலும் நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும் வேத உபநிஷதங்களுக்குரிய மெய்ஞ்ஞான கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்கிறார்.
13.03.2019 முதல் 09.04.2019 வரை அதிசாரமாகவும், 10.04.2019 முதல் 18.05.2019 வரை வக்ர கதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.


செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் குரு வந்து அமர்வதால் ரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் பாதிப்படையும். ரசாயனத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்படும். உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், மாசுக்கட்டுப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். மருத்துவர்களுக்கு வருமானம் அதிகமாகும்.

சூறாவளிக் காற்றுடன் கனமழை பொழியும். புதிய புயல் சின்னங்கள் உருவாகும். புயலால், இடிகளால் பேரழிவு உண்டு.காலப்புருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால் ரியல் எஸ்டேட் சுமாராக இருக்கும். மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள், அடித்துச் செல்லப்படும். நாட்டின் கடன் அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். இனி, பனிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.
மகரம்
இதயத்தால் பேசுபவர்களே! குலம், கோத்திரம் பார்க்காமல் பாசமுடன் பழகுபவர்களே!  இதுவரை உங்கள் ராசிக்கு 10-ல் அமர்ந்திருந்த குருபகவான் உங்களை பல பிரச்சினைகளில் சிக்க வைத்து, பல வகையிலும் பாடாய்படுத்தினர்.
உங்களுக்கு வர வேண்டிய பணம் வராமல் போனதால் நீங்கள் வாங்கியிருந்த இடத்தில் திருப்பித் தர முடியாமல் திண்டாடினீர்களே! குடும்பத்தில் உள்ளவர்களும், உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் போனார்களே! சொந்தபந்தங்கள் பார்த்தும் பார்க்காமலும் சென்றார்களே! பிள்ளைகளாலும் சிரமப்பட்டீர்களே! தலைக்குனிவையும், வீண் பழியையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் அமர்வதால் பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பது போல இனி எதிலும் வெற்றி பெறுவீர்கள்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். திக்கு திசையறிந்து இருட்டிலிருந்து வெளியுலகத்துக்கு வருவீர்கள். இனி தொட்டதெல்லாம் துலங்கும்.    உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால் அழகு, இளமை கூடும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். சோர்வு, களைப்பு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள்.
உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். குரு ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.     04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள்.


சிலரை நம்பிப் பணம் கொடுத்து ஏமாறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டும். அவசர முடிவுகள் வேண்டாம். சிலர் உங்களைத் தூண்டி விடுவார்கள். கொந்தளிப்பில் வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள்.
21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்துக்கு குருபகவான் செல்வதால் குடும்பத்தில் அடுத்தடுத்து மகிழ்ச்சி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியதை பைசல் செய்வீர்கள். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். புது வேலை கிடைக்கும். சங்கம், இயக்கங்களில் சேர்ந்து  பொதுச் சேவைகளைத் தொடங்குவீர்கள். போட்டி, தேர்வுகளில் வெற்றி உண்டு. இந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் பலனடைவீர்கள்.
20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்துக்குச் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவார்கள். பூர்விகச் சொத்தில் மராமத்துப் பணிகள் செய்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும்.
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 12-ம் வீட்டில் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.


10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் சிக்கனமாக இருக்க வேண்டு மென்று நினைத்தாலும் அத்தியா வசியச் செலவுகள் அதிகமாகும். பணவரவு உண்டு.
வீடு கட்ட, வாங்க வங்கிக்கடன் கிடைக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும். முக்கியக் கோப்புகளில் கையெழுத்திடும் முன்பாக சட்ட ஆலோசகரைக் கலந்தாலோசிப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். சில நேரங்களில் சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனபிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள்.


வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். லாபம் இரட்டிப்பாகும். புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் பலவிதங்களிலும் சங்கடப்பட்டீர்களே! தகுதியற்றவர்களிடமெல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருந்ததே! அலுவலகத்தில் இனி மதிக்கப்படுவீர்கள்.
மூத்த அதிகாரிகளின் பலம், பலவீனம் உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன் அடுத்தடுத்து வெற்றிகளையும் பணப்புழக்கத்தையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: முருகன் கோயிலுக்கு சஷ்டி, திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். கேழ்வரகைத் தானமாக கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்