Run World Media: நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதல்: மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வந்த தந்தை பலி

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, May 30, 2019

நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதல்: மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வந்த தந்தை பலி

சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த குமார்(வயது 46) ஓட்டினார்.


 நேற்று அதிகாலை ஜெயங்கொண்டம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம் காரைக் குறிச்சி அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.


அந்த சாலையின் வளைவில் சரக்கு லாரி ஒன்று நின்று கொண்டிருந்ததை அரசு பஸ் டிரைவர் கவனிக்காததால் எதிர்பாராதவிதமாக பஸ், சரக்கு லாரியின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் ஒரு பகுதி முழுவதும் சேதம் அடைந்தது.


இதில் பஸ்சில் முன்புற சீட்டில் அமர்ந்து பயணம் செய்த சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த ரகுபதி(67) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் பஸ்சில் இருந்த ரகுபதியின் மனைவி விஜய குமாரி(62), மகள் லாவண்யா(32), மூத்த மகளின் மகள் மவுலிகா(15), திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் ஹரிகரன்(12), குமரவேல் மகள் மகேஸ்வரி(22), வடுகநாதன் மகன் பாலாஜி(8), மகள் ஷாலினி (3), வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் சுப்பிரமணியன் மனைவி அமுதா (45), தஞ்சை வண்டிக்காரத்தெரு ரமேஷ் மனைவி ராஜேஸ்வரி(36), திருவையாறு செல்வராஜ் மகன் யுவராஜ் (34), கபிஸ்தலம் நடராஜ் (55), பாபநாசம் கணேசன் மகன் மாரிமுத்து (24), அரசு பஸ் கண்டக்டர் அய்யம்பேட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன்(58) உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சுகளில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஜயகுமாரி உள்பட 4 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


 பஸ் மோதியதில் சரக்கு லாரியின் டீசல் டேங்க் உடைந்து, அதிலிருந்து டீசல் வெளியேறியதால் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அதனை சரி செய்தனர்.

விபத்தில் பலியான ரகுபதிக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சாந்தி, 2-வது மகள் ரம்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இளைய மகள் லாவண்யா திருமணம் ஆகாதவர்.


 இவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியை தஞ்சாவூரில் உள்ள 2-வது மகள் ரம்யா வீட்டில் நடத்த முடிவு செய்து இருந்தனர். அதற்காக ரகுபதி குடும்பத்துடன் புறப்பட்டு வந்தபோது விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சிதம்பரம் வய்யூர் பெரியத்தெருவை சேர்ந்த அரசன் மகன் சீனிவாசன் (35), அரசு பஸ் டிரைவர் குமார் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்