வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2021-10-10
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 18, 2021

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பிக் ரெய்டு | Ex-Minister Vijayabaskar Vigilance Raid Today | Vil Ambu News

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.

விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இவர் ஆட்சி காலத்தில் வருமானத்தி்ற்கு அதிகமாக 27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித் துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர்.

அவருக்கு சொந்தமான வீடுகள், குவாரிகள், அலுவலகங்கள், உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தீவிர சோதனை.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள் சிக்கியது.

தற்போது சென்னையில் அவரது மனைவியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Sunday, October 17, 2021

6 மாதத்தில் காதல் ஜோடி தற்கொலை | நடந்தது என்ன.? | 6 Months Love marriage couple subside | Vil Ambu News

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடிக்கு உதவி செய்யாமல் இருந்துள்ளனர் அவர்களின் உறவினர்கள்.

வருமானமின்றி தவித்து இறுதியில் 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகேயிருக்கும் கிளாமரம் கிராமத்தை சார்ந்த நாகராஜ் (27). இவர், அதே பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்த தனலட்சுமி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. இந்த காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக வீட்டினை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளது.


பின்னர், தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், தனலட்சுமி தற்போது கர்ப்பிணியான நிலையில், காதல் திருமண ஜோடியை இருதரப்பு பெற்றோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாகராஜுக்கும் உணவகத்தில் சரிவர வேலை இல்லாமல் போயுள்ளது. இதனால் குடும்பம் நடத்த வருமானம் இன்றி சிரமப்பட்டுள்ளனர். வருமானமின்றி சாப்பாட்டிற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். காதலித்து மணந்ததால் உறவினர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.

இதனைத்தொடர்ந்து, வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக தம்பதி தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுக்க, 6 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த தனலட்சுமி - கணவர் நாகராஜ் இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் வீட்டு கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாத காரணத்தால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கமுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கதவை உடைத்து வீட்டிற்குள் செல்கையில், தம்பதி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்களின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு:
மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104
சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050

Saturday, October 16, 2021

மின்வாரிய வேலைவாய்ப்பு | தமிழக இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ் | TNEB Requirements Latest News | Vil Ambu News

மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. முன்னுரிமையின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே அற்புரதப் புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மாதந்தோறும் மின் கட்டணத்தைக் கணக்கிடுவது தொடர்பாக தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு வீட்டுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாகவும், அதேசமயம் மின் கணக்கீட்டாளர் பணி நியமனம் தொடர்பாகவும் பரிசீலனையில் உள்ளது. இதில், எந்த அளவுக்குச் சாத்தியக்கூறுகள் உள்ளதோ, அதைப் பொறுத்து நிச்சயம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, கணக்கீடு செய்யக்கூடிய பணியாளர்கள் 50 சதவீத அளவில்தான் உள்ளனர்.

கடந்த 5 மாத ஆட்சிப் பொறுப்பேற்று 5 மாத காலத்தில் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 தேர்தல் வாக்குறுதிகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. படிப்படியாக அனைத்துத் தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

மின்கம்பிகள் அறுந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்படுவது துரதிர்ஷ்டவசமானது. வருங்காலத்தில் தரமான மின் கம்பிகள் அமைக்கப்பட்டு, அதற்கான கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதியதாக 9 துணை மின் நிலையங்களும், 15 துணை மின் நிலையங்களைத் தரம் உயர்த்தவும் 163 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. முன்னுரிமையின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். மின்வாரியம் 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. 

இதற்கு ஆண்டு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வட்டி செலுத்தக்கூடிய நிலையில், அதிகபட்ச வட்டிக்கு கடந்த ஆட்சியாளர்கள் கடன் வாங்கி உள்ளனர். இதெல்லாம் சீரமைக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இப்போது அவசர அவசியம் கருதி, எந்தெந்தப் பணியிடங்கள் தேவையோ அவை நிரப்பப்படும்".

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.


தோனி அப்படி என்ன மேஜிக் செய்தார்.? 10-வது ஓவருக்கு பின் நடந்தது என்ன...? Dhoni Secret Operation after 10th Over | Vil Ambu News

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.


இந்தப் போட்டியில் தோனி பேட்டிங் கூட செய்யவில்லை. இது வீரர்களின் திறமையால் கிடைத்தது இதில் தோனியின் பங்கு என்ன இருக்கு என சிலர் வேடிக்கையாகக் கூட கேட்கக் கூடும். ஆனால், ஒரு கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் போக்கு எப்படி மாறுகிறது என்பது உற்று நோக்குபவர்களுக்கு தெரியும் ஒரு கேப்டனாக தோனியின் பங்கு.

அப்படி என்னதான் செய்தார் தோனி!

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 192 ரன்கள் எடுத்திருந்தாலும், துபாய் பேட்டிங் மைதானம் என்பதால் வெற்றி வாய்ப்பு சம வாய்ப்புடனே இருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முக்கியமான கேட்சை தொடக்கத்திலேயே கோட்டை விட்டார் தோனி. இதுவே சென்னை அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பிறகு வெங்கடேஷ் ஐயர் அதிரடி காட்ட ஆட்டம் மெல்ல மெல்ல கொல்கத்தா பக்கம் சென்றது. ஆட்டத்தின் 10வது ஓவர் வரை சென்னை அணியின் ரசிகர்கள் இருந்த மனநிலையே வேறு. வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட பாதிக்கு கீழ் சென்றுவிட்டது.

அந்த அளவிற்கு கொல்கத்தா அணி தொடக்க வீரர்களான வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் ஆகியோர் ஆட்டம் இருந்தது. 10 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 88 ரன்கள் குவித்துவிட்டார்கள். இந்த இடத்தில் இருந்துதான் கேப்டன் தோனியின் வேலை தொடங்கியது.

ஆட்டத்தின் 5வது ஓவரை வீசி 11 ரன்கள் கொடுத்திருந்த ஷர்துல் தாக்கூரை பந்துவீச அழைத்தார் தோனி. அதற்கு முன்பாக பிராவோவும், ஜடேஜாவும் பந்துவீசிக் கொண்டிருந்தனர். தோனி வைத்த நம்பிக்கையை காப்பாற்றி அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை. அதன் பிறகு தோனி, கொல்கத்தா அணிக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. ஷர்துல் தாக்கூருக்கு அடுத்து உடனடியாக ஹசல்வுட்டை அழைத்தார். அந்த ஓவரிலும் ஒரு விக்கெட் வீழ்ந்தது.

தொடக்கத்தில் இருந்தே தீபக் சாஹர் ரன் மழை பொழிந்து கொண்டிருந்ததால் டெத் ஓவர் அவர் வீசுவதை தவிர்த்து 14வது ஓவரை வீச அழைத்தார் தோனி. அது தீபக் சாஹருக்கு கடைசி ஓவர். 9 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் சாஹர். இடையில் ஜடேஜாவையும் பந்துவீச வைத்தார். அந்த வரிசையில் தான் ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 15வது ஓவரில் தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹசன் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

ஷர்துல் தாக்கூரையும், ஹசல்வுட்டையும் அடுத்தடுத்து பந்துவீச வைத்து ஓவருக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இறுதியில் வெற்றியும் உறுதியானது.

10 ஓவர் வரை இருந்த நிலையில் அணி வீரர்களின் நம்பிக்கை சற்றே தளர்ந்து இருக்கும். கூட அணியில் நிகழ்ந்த தவறுகளும் கூட அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்திருக்கும். 

அவர்களை துவண்டுவிடாமல் உற்சாகப்படுத்தி நம்பிக்கையை இறுதிவரை தக்க வைக்க வேண்டியது ஒரு கேப்டனின் கடமை. அதனைத்தான் தோனியும் செய்தார்.