வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கூலிக்காக செய்யவில்லை; நண்பனுக்காக 3 பேரை கொன்றோம் - மோகன்ராம் வாக்குமூலம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

கூலிக்காக செய்யவில்லை; நண்பனுக்காக 3 பேரை கொன்றோம் - மோகன்ராம் வாக்குமூலம்கூலிக்காக செய்யவில்லை, நண்பனுக்காக 3 பேரை கொன்றோம் என்று கோவை அருகே 3 பேரை கொலை செய்த வழக்கில் மும்பையில் கைதான மோகன்ராம் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 


 தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த மகாதேவன் (வயது 32) மற்றும் அவருடைய நண்பர்களான தியாகராஜன் (25), அருண் (22) ஆகிய 3 பேரும் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப் பட்டனர். திருச்சி சிறையில் அடைத்தால் பாதுகாப்பாக இருக்காது என்பதால், அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அந்த வழக்கில் இருந்து அவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கோவை சிறையில் இருந்து கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26–ந் தேதி வெளியே வந்தனர். அவர்களை நண்பர்கள் காரில் அழைத்துச்சென்றனர். அந்த காருக்குள் டிரைவருடன் சேர்த்து மொத்தம் 8 பேர் இருந்தனர். காரை ரவி என்பவர் ஓட்டினார். அவர்கள் சென்ற கார் அன்று இரவு 8.30 மணியளவில் கோவை சிந்தாமணிபுதூர் எல் அண்டு டி பைபாஸ் ரோடு சந்திப்பு அருகே சிக்னலில் நின்றது. அப்போது அங்கு கார்களில் துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் வந்த மர்ம கும்பல் அந்த காரை வழிமறித்து துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் காரை ஓட்டிய டிரைவர் ரவியின் மீது குண்டு பாய்ந்தது. இதனால் அவரால் காரை ஓட்ட முடியவில்லை.

 

இதையடுத்து காருக்குள் இருந்த மகாதேவன் உள்பட மற்ற 7 பேரும் கீழே இறங்கி தப்பி ஓடினார்கள். இதில் மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகிய 3 பேரும் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். உடனே அவர்கள் 3 பேரையும் மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடியான மோகன்ராம் (வயது 35), அவருடைய கூட்டாளி காசிநாதன் (40) ஆகியோர் தலைமறைவானார்கள். அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக போலீசில் சிக்கவில்லை.
 

இந்த நிலையில் மும்பையில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த மோகன்ராமை மும்பை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். உடனே அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட முயற்சி செய்து தப்பிக்க முயன்றார். உடனே போலீசார் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்து எச்சரித்ததால், மோகன்ராம் போலீசில் சரண் அடைந்தார்.
கோவை அருகே நடந்த 3 பேர் படுகொலை வழக்கில் மோகன்ராம் முக்கிய குற்றவாளி என்பதால், அவர் கைது செய்யப்பட்டது குறித்து மும்பை போலீசார் சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
 

 இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் சூலூர் போலீசார் மும்பை சென்று மோகன்ராமை கைது செய்து, நேற்று முன்தினம் இரவில் விமானம் மூலம் கோவை அழைத்து வந்தனர். நேற்று காலை மோகன்ராமை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்து வந்து, மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். மோகன்ராமை வருகிற 17–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் உத்தரவிட்டார். மோகன்ராம் தரப்பில் மூத்த வக்கீல் ஞானபாரதி ஆஜரானார். இதையடுத்து போலீசார் மோகன்ராமை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
 


முன்னதாக மோகன்ராம் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:–

எனது உயிர் நண்பரின் உறவினரை மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகியோர் கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் கைதான அவர்கள் 3 பேரும் ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றனர். பின்னர் அவர்கள் 2015–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26–ந் தேதி கோவை சிறையில் இருந்து வெளியே வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே நாங்கள் அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். இதற்காக நாங்கள் ஆகஸ்டு மாதம் 24–ந் தேதியே கோவை வந்து, மத்திய சிறையின் அருகே உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினோம்.
 

எப்படியும் அவர்கள் 3 பேரும் தஞ்சாவூருக்கு தான் செல்வார்கள். அதற்கு அவர்கள் கோவை–திருச்சி ரோடு வழியாகதான் செல்ல வேண்டும். எனவே அவர்களை அந்த ரோட்டில் வழிமறிக்க 6 இடங்களை தேர்வு செய்தோம். சம்பவம் நடந்த அன்று இரவு 8 மணிக்கு அவர்கள் 3 பேரும் சிறையை விட்டு வெளியே வந்தனர். அப்போது நாங்கள் அங்கு ஒரு காருக்குள் மறைந்து இருந்தபடி கண்காணித்து கொண்டே இருந்தோம்.
அவர்கள் ஒரு காரில் ஏறி கோவை–திருச்சி ரோட்டில் வேகமாக சென்றனர். அந்த காருக்கு பின்தொடர்ந்து நாங்கள் 3 கார்களில் சென்றோம். அவர்கள் சூலூரை கடந்து சென்ற பின்னர்தான் கொலை செய்ய முடிவு செய்து இருந்தோம். ஆனால் அவர்களின் கார் சிந்தாமணிபுதூர் அருகே எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் உள்ள சிக்னலில் நின்றது. அப்போது அங்கு நின்ற வாகனங்களின் எண்ணிக்கையும் மிகக்குறைவு.

 

இதுதான் சரியான நேரம் என்று நினைத்து அவர்கள் இருந்த காருக்கு முன் சென்று எங்கள் காரை குறுக்கே நிறுத்தினோம். பின்னர் கையில் துப்பாக்கி, அரிவாள்களுடன் காரை விட்டு கீழே இறங்கினோம். என்னை பார்த்ததும் காரின் முன்பகுதியில் இருந்த மகாதேவன் காரை வேறு வழியாக திருப்பும்படி டிரைவரிடம் கூறினார். எனவே அந்த கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினோம். அப்போது டிரைவர் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. இதனால் அவரால் காரை ஓட்ட முடியவில்லை. இதையடுத்து காருக்குள் இருந்த மற்ற 7 பேரும் கீழே இறங்கி ஓடினார்கள். அதில் மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகியோர் மட்டுமே எங்களிடம் சிக்கினார்கள். எனவே நாங்கள் அவர்களின் தலைகளை துண்டித்து கொடூரமாக வெட்டி கொலை செய்தோம். இது நாங்கள் கூலிக்காக செய்த கொலை அல்ல. எனது நண்பனுக்காக, அவன் மீது நான் வைத்திருந்த பாசம் காரணமாக செய்த கொலை. இதற்காக நாங்கள் எவ்வித பணமும் வாங்கவில்லை.
 

இந்த சம்பவம் நடந்து முடிந்ததும், போலீசார் என்னை என்கவுண்டரில் கொன்று விடுவார்கள் என்று நினைத்து குஜராத் மாநிலத்துக்கு தப்பிச்சென்றேன். அங்கிருந்து ஒரு ஆண்டுக்கு முன்பு மும்பை சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். எனினும் எனது இடத்தை எப்படியோ கண்டுபிடித்து போலீசார் கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மோகன்ராமை போலீசார், சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் 3 பேரை கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டியதுடன், கொலை செய்தது எப்படி? என்று நடித்து காட்டினார். கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள காசிநாதனை போலீசார் தேடி வருகிறார்கள். கைதான மோகன்ராமிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், 29 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மோகன்ராம் மீது தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்பட ஏராளமான வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment