வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: MLA News Madurantakam
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label MLA News Madurantakam. Show all posts
Showing posts with label MLA News Madurantakam. Show all posts

Friday, February 05, 2021

செண்டிவாக்கத்தில் திரளாக திரண்ட பொதுமக்கள்…! குழந்தைக்கு பெயர் சூட்டிய உதயநிதி ஸ்டாலின்..! பங்காரு அடிகாளரிடம் ஆசி பெற்ற தி.மு.க. இளைஞரணி செயலாளர் | Udhayanithi Stalin Talking at Sendivakkam

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், காஞ்சி தெற்கு மாவட்டம், அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக ஒருங்கிணைந்து வரவேற்பு அளித்து எழுச்சிமிகு கோஷமிட்டனர்.


காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு, அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு ஆகியோர் சிறப்பான முறையில் வரவேற்ப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


பின்னர், பொதுமக்களிடம் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களின் இந்த எழுச்சியானது ஆளும் அ.தி.மு.க ஆட்சியை அடியோடு விரட்ட மக்கள் தயாராகிவிட்டதை உணர்த்துகிறது எனவும், தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கான உங்களுக்கானது மட்டுமே என உறுதியளித்தார். மேலும், பிறந்த குழந்தைக்கு “உதயசூரியன்” என பெயர் சூட்டினார்.


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனை வணங்கி, பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று பின்னர் அச்சிறுபாக்கம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களில் உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தினை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் கோ.ப.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


 

Friday, December 11, 2020

வீட்டுவசதி மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைக்க கோரி துறைசார்ந்த செயலாளர்களை சந்தித்து மனு அளித்த மதுராந்தகம் எம்.எல்.ஏ | Madurantakam MLA Pugazhenthi DMK | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் குடிசை வீடுகளில் வசித்து வரும் மக்களின் நலன் கருதி அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு வீட்டு வசதித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் இ.ஆ.ப-விடம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி நேரில் சந்தித்து மனு அளித்தார்.


மேலும், மதுராந்தகம் தொகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பேரிடர் மேலாண்மை செயலாளர் பணிந்தர் ரெட்டி இ.ஆ.ப-யை சந்தித்து மனு அளித்தார்.



அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் பெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட தண்டலம் பணங்கல் ஓடை, தண்டரைப் பேட்டை ஊராட்சிக்குட்பட்ட வேடந்தாங்கல் தண்டலம் நெல்வாய் ஓடை, வெளியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் சமத்துவபுரம் – கொங்கரை மாம்பட்டு சாலை தரைப்பாலம் உள்ளிட்டவற்றை மேம்பாலமாக மாற்றக் கோரியும், மதுராந்தகம் ஒன்றியம், நெட்றம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கொல்லம்பாக்கம் காலனி மேம்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதை சீர் செய்யக் கோருதல் குறித்தும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


 

Thursday, November 19, 2020

கீழாமூரில் கிளியாற்றில் வெள்ளம் | தற்காலிக பாதையை நேரில் ஆய்வு செய்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி | Keezhamur Kiliyar River Breaking Roads | MLA Pugazhenthi Visit | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழாமூர் ஊராட்சியில் கிளியாற்றின் குறுக்கே 6 கோடியே 64 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைப்பதற்கான பணி கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு தற்காலிக சாலையினை அமைத்து பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையின் காரணமாக கிளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக சாலையில் உடைப்பு ஏற்பட்டு இராமாபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையானது முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. 

இதனையடுத்து மண் மூட்டைகளைக் கொண்டு தற்காலிக தடுப்புகள் அமைத்து சாலை சரிசெய்யப்பட்டது. இந்த வெள்ளத்தினால் கிளியாற்றின் அருகே உள்ள சுமார் 30 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டது.

கடந்த 18.11.2020 மாலை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி தற்காலிக சாலையினை நேரில் ஆய்வு செய்து பாலம் சம்மந்தமான தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  

மேலும், இந்த தற்காலிக பாலம் எத்தனை மண் மூட்டைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது..? எதனால் பாலம் கட்டுமானப் பணிகள் தொய்வடைந்துள்ளது என்பதனை கேட்டறிந்து பாலத்தினை விரைந்து கட்டி முடிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் முறையிட்டார்.

இந்த நிகழ்வின்போது, அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Thursday, November 12, 2020

தினந்தோறும் தொகுதி மக்களின் கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளும் மதுராந்தகம் எம்.எல்.ஏ | Madurantakam MLA Latest News | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் தினந்தோறும் தங்கள் பிரச்சனைகள் குறித்து மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களாக அளித்துவருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பொதுமக்களின் பகுதிகளுக்கே சென்று குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்று அந்தந்த மனுக்களை துறைசார்ந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து, உரிய நடவடிக்கைகளை மதுராந்தகம் எம்.எல்.ஏ மேற்கொண்டுவருகிறார்.

அதன்படி, கடந்த 09.11.2020 அன்று தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநரை நேரில் சந்தித்து தொகுதியின் தேவைகள் தொடர்பான மனுவினை அளித்தார்.

மேலும், தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற பட்டதாரி பெண்ணிற்கு திருமண உதவித் தொகை வழங்க சான்றிதழ் வழங்கினார். பின்னர், எலப்பாக்கம் ஊராட்சி ஈச்சங்காடு பகுதி மக்களின் நிலம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக கடந்த 10.11.2020 அன்று கோரிக்கை மனுவை பெற்று துறைசார்ந்த அதிகாரிகள் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

Friday, October 23, 2020

மாத்தூர் ஊராட்சியில் சிறுபாலம் அமைக்க ஆய்வு மேற்கொண்ட மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி | Mathur PWD Drain Bridge Inspection | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மாத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாயினை தூர்வாரி சிறுபாலம் அமைப்பதற்காக நேற்று (22.10.2020)-ல் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி நேரில் ஆய்வு செய்தார்.  

மேலும், மதுராந்தகம் தொகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய அரசுத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு மேற்கொண்டு அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக களையப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Thursday, October 15, 2020

அச்சிறுபாக்கத்தில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத நியாயவிலைகடை கட்டிடம்..! அதிகாரிகளின் மெத்தனமா…? தி.மு.க. எம்.எல்.ஏ மனு…! | Acharapakkam Malai Nagar Fair Price Shop Issue | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட மலை நகர் பகுதியில் கடந்த 2016-17-ம் நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து நியாயவிலைக் கடை கட்டப்பட்டது. 

இந்த கடையில் இதுநாள் வரை குடிமைப் பொருட்கள் ஏதும் வழங்கப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மேலும், இந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பொதுமக்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, நேற்று (14.10.2020)-ல் அப்பகுதியில் நடமாடும் ரேஷன் கடையை துவக்கி வைத்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தியிடம் மலைநகர் பகுதி மக்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது என்னவெனில், எங்கள் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகாலமாக எங்கள் பகுதியில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையில் பொருட்கள் வழங்காமல் பயன்பாட்டில் இல்லாததால் நாங்கள் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அச்சிறுபாக்கம் காந்தி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதாகவும், தேசிய நெடுஞ்சாலையினை கடந்து சென்று பொருட்கள் வாங்குவதால் சாலை விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், முதியோர்கள் சாலைகளை கடப்பதை தவிர்ப்பதற்காகவே பல சமயங்களில் பொருட்களை வாங்க இயலாத சூழ்நிலையில் உள்ளதாகவும், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவினை ஏற்றுக் கொண்ட மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி, அதனை பொது விநியோக திட்ட துணைப் பதிவாளரிடம் அளித்து இப்பகுதியில் உள்ள நியாயவிலை கடையினை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 


Wednesday, October 14, 2020

நில ஆக்கிரமிப்பை மீட்டெடுத்த மதுராந்தகம் எம்.எல்.ஏ புகழேந்தி | Land Issue in Janakipuram at Madurantakam Taluk | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஜானகிபுரம் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே 98 செண்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இருவர் இது எங்கள் முன்னோர்களின் சொத்துதான் எனக்கூறி பல இலட்சத்திற்கு பேரம் பேசி பணம் பெற்று நிலத்தை விற்பனை முயற்சி செய்துள்ளனர். 

இதனை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இந்த சட்டத்திற்கு புறம்பான செயலை தட்டிக் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் ஆக்கிரமிப்பு பணிகளில் கவனம் செலுத்தியதால் இளைஞர்கள் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளனர்.


பின்னர், “இந்த இடம் அரசுக்கு சொந்தமான நிலம், இதனை யாரும் உரிமை கோர முடியாது” என்ற பதாகைகளை வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இருமுறை வைத்தும் அந்த பதாகைகளை ஆக்கிரமிப்பாளர்கள் பிடிங்கி எறிந்துள்ளனர்.

எனவே, அப்பகுதி இளைஞர்கள் இந்த விவகாரம் குறித்து கடந்த 02.10.2020 அன்று மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து கிராம இளைஞர்களிடம் தெளிவாக கேட்டறிந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ, கிராம இளைஞர்களை 06.10.2020 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் புகார் மனுவை அளித்தார். பின்னர், மதுராந்தகம் எம்.எல்.ஏ. சு.புகழேந்தி முயற்சியில் செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின்பேரில் அந்த இடம் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த இடம் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்காமல் இருப்பதுற்கு சமுதாய நலக்கூடம் கட்டித்தரக் கோரி 13.10.2020 அன்று மாலை மதுராந்தகம் எம்.எல்.ஏ-வின் வீட்டிற்கே சென்று ஜானகிபுரம் கிராம இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட எம்.எல்.ஏ இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பதாக உறுதியளித்தார்.

இந்த செயல்களுக்காக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர். நெல்லிக்குப்பம் சு.புகழேந்திக்கு ஜானகிபுரம் கிராம இளைஞர்கள் தங்களின் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


Sunday, September 27, 2020

எல்.எண்டத்தூரில் நடைபெற்ற இணையவழி தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி | DMK Online Membership Card Function at L.Endathur | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் எல்.எண்டத்தூரில் 100-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் இணையவழி உறுப்பினராக தி.மு.க-வில் இணைந்தனர்.


காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டடோர் 24.09.2020 அன்று தி.மு.க-வில் இணையவழி உறுப்பினராக இணைந்தனர். 


அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தம்பு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் சிவபெருமான் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் வேதாச்சலம், அசோகன், தீணன், சீனிவாசன், லெனின், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கலியுக கண்ணதாசன், பிரபாகரன், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் டி.ஆர்.நாராயணன், எல்.எண்டத்தூர் ஊராட்சி செயலாளர் பாண்டுரங்கன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


புதியதாக தி.மு.க-வில் இணைந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் “எல்லோரும் நம்முடன்” என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட், தொப்பி, இணையவழி உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டு கட்சியின் நெறிமுறைகள் குறித்த அறிவுரைகளை மாவட்ட செயலாளரும், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினரும் வழங்கினர்.


தி.மு.க-வில் புதியதாக இணைந்த உறுப்பினர்கள் கழக முன்னோடிகளுடன் இணைந்து தமிழகத்தின் அடுத்த ஆட்சி தி.மு.க ஆட்சிதான் எனவும், அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் எனவும் சபதத்தினை எடுத்து அதற்கான அனைத்து களப்பணிகளையும் சிறப்பாக மேற்கொள்வோம் என கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tuesday, May 05, 2020

அச்சிறுபாக்கம் பள்ளிப்பேட்டை சாலை பகுதியில் தி.மு.க சார்பாக வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் | Corona Relief Given by DMK Persons in Acharapakkam Pallipettai Road | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.9, பள்ளிப்பேட்டை சாலை பகுதியில் வசிக்கும் 200 நலிவடைந்த குடும்பத்தினர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி தலைமையில் அச்சிறுபாக்கம் பேரூராட்சி தி.மு.க.வினர் சார்பாக ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
 
இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.டி.ஆர்.வி. எழிலரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், அச்சிறுபாக்கம் பேரூர் தி.மு.க செயலாளர் எஸ்.உசேன், அச்சிறுபாக்கம் பேரூர் முன்னாள் தலைவர் கோதண்டராம ரெட்டியார், பேரூராட்சி பொருளாளர் பி.எம்.சுப்பிரமணியம், அச்சிறுபாக்கம் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சிவசங்கரன், அவைத்தலைவர் சையத் முகமது, கிளை செயலாளர் எஸ்.மஸ்தான், கிளை பிரதிநிதி எம்.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும், வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் அப்துல் ரசாக் மற்றும் தமிழ்நாடு மேல்நிலை, உயர்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலச் செயலாளர் ஏ.ஜெயமுருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.