வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: October 2021
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, October 31, 2021

சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம் | இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு | England Scientist innovative Cellphone charging by urine | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

இங்கிலாந்து விஞ்ஞானிகள் சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.


இங்கிலாந்தின்,பிரிஸ்டலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு மனித கழிவுகளை(யூரினை) மின்சாரமாக மாற்றும் புதிய சுத்தமான ஆற்றல் எரிபொருள் கலத்தை (battery) உருவாக்கியுள்ளது.இதன்மூலம்,செல்போன் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்து கொள்ளலாம்.மேலும் அதை ஒருநாள் முழு வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு பயன்படுத்த விரும்புகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கிளாஸ்டன்பரி திருவிழாவில் 'பீ பவர்' திட்டம் முதன்முதலில் பகிரங்கமாக சோதனை செய்யப்பட்டது, அங்கு விஞ்ஞானிகள் கழிப்பறைகள் நிலையான மின்சாரத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். இதுவரை, இது மொபைல் போன்கள், லைட் பல்ப்கள் மற்றும் ரோபோக்களை சார்ஜ் செய்ய பயன்படுத்தப் படுகிறது.இந்த நிலையில், தற்போது வீடுகளுக்கும் அந்த மின்சாரத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக பிரிஸ்டல் பயோஎனர்ஜி சென்டரின் இயக்குனர் டாக்டர் ஐயோனிஸ் ஐரோபௌலோஸ் கூறுகையில்:"திருவிழாவில் ஐந்து நாட்களில் சிறுநீர் கழிக்கும் நபர்களிடமிருந்து சிறுநீர் ஓட்டம் 300 வாட்-மணிநேர மின்சாரத்தை உருவாக்க எங்களுக்கு உதவியது.இதன்மூலம்,ஒரு வாட் லைட்பல்பை 300 மணிநேரம் அல்லது 10 லைட் பல்ப்களை 30 மணிநேரத்திற்கு இயக்க முடியும்" என்று விளக்குகிறார்.

இத்தகைய கண்டுபிடிப்பு நுண்ணுயிர் எரிபொருள் செல்கள் என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. நுண்ணுயிரிகள் பொருளை அதன் வேதியியல் பாகங்களாக உடைத்து, அவை பெருகும்போது, ​​சிறிய அளவிலான மின்சாரத்தை உருவாக்குகின்றன.அயோனிஸ் மற்றும் அவரது குழுவினர் அழுகிய பிளம்ஸ் மற்றும் இறந்த ஈக்களை சாப்பிடக்கூடிய ஒரு ரோபோவை உருவாக்கியபோது இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

ஆர்கானிக் கழிவுகள் ரோபோவின் பேட்டரியை இயக்கும் என்பதை நிரூபித்த பிறகு,குழு மனித கழிவுகளிலிருந்து ஆற்றலை உருவாக்கியது. 

மேலும்,அவர்களின் பணி தொடரும் போது, ​​குழு எரிபொருள் செல்களை சுருக்கி, வீடுகளின் சுவர்களில் பொருத்தும் அளவுக்கு சிறிய செங்கற்களில் வைக்க விரும்புகிறது. இந்த செங்கற்களால் எதிர்கால வீடுகள் கட்டப்பட்டு, உங்கள் வீட்டிற்கு தேவையான மின்சார ஆற்றல் சிறுநீர் கழிப்பதிலிருந்து சக்தியாக பெறமுடியும் என்பது இதன் கருத்து.

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு இரண்டு முதல் இரண்டரை லிட்டர் வரை 'திரவ கழிவுகளை' உற்பத்தி செய்கிறான்.உதாரணமாக, "ஐந்து பேர் கொண்ட குடும்பமாக இருந்தால், அது 10 முதல் 12 லிட்டர் சிறுநீர் வரை இருக்கும்.ஒரு அளவிடப்பட்ட நுண்ணுயிர் எரிபொருள் செல் அமைப்புக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க இது போதுமானது" என்று ஐரோபௌலோஸ் கூறுகிறார்.

இத்தகைய புதிய கண்டுபிடிப்பு ஏழை நாடுகளில் சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க பயன்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

"பாம்பின் வாயில் சிக்கிய தவளையை போல் பாஜகவிடம் அதிமுக சிக்கிக் கொண்டுள்ளது" - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் | Thol Thirumavalavan about BJP ADMK relationship | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

பாம்பின் வாயில் சிக்கிய தவளையை போல் பாஜகவிடம் அதிமுக சிக்கிக் கொண்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், சாதிய ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ஆணவ படுகொலை

ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசும் சரி, இப்போது உள்ள பாஜக அரசும் சரி எந்த முனைப்பையும் காட்டவில்லை என திருமாவளவன் வேதனை தெரிவித்தார். நாடு முழுவதும் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் காட்டுமிராண்டிதனமாக நடத்தப்படுகிற ஆணவ படுகொலைகளை தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டினார். ஆணவ படுகொலைக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வராதது தனக்கு அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சாதி மறுப்புத் திருமணம்

இவர்கள் விரும்பினால் ஒரு சட்டம் கொண்டுவருவார்கள் விரும்பாவிட்டால் ஒரு சட்டத்தை நீக்குவார்கள் என மத்திய பாஜக அரசை விமர்சித்த அவர், தமிழகத்தில் நாடக அரசியல் செய்யும் கும்பல் என பாமகவை சூசகமாக சாடினார். ஜாதிமறுப்புத் திருமணங்கள் இன்று உருவானது அல்ல என்றும் திருமாவளவன் வந்த பிறகு தான் ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக நாடக அரசியல் செய்யும் கும்பல் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தார்.

உதவி செய்வது போல்

திருவிழாக்களுக்கு உதவி செய்வது போலவும், சாமி சிலைகளை வாங்கிக் கொடுப்பது போலவும் உதவி செய்து தமிழகத்தில் இன்று கிராமங்கள் தோறும் சங்பரிவார்கள் ஊடுருவி வருவதாக திருமாவளவன் தெரிவித்தார். கிராமம் கிராமமாக சென்று தன்னார்வலர்கள் என்ற பெயரில் சங் பரிவார்கள் நச்சு அரசியலை விதைப்பதாகவும் தமிழகத்தை அவர்கள் குறிவைத்துவிட்டார்கள் எனவும் கூறினார். இதனால் பாதிக்கப்படப் போவது நம் வீட்டு பிள்ளைகள் தானே என்ற புரிதல் கூட இல்லாமல் சிலர் செயல்படுவதாக வேதனை தெரிவித்தார்.

பாஜக தந்திரம்

தமிழக கிராமங்களில் சாதி வெறியர்களின் படம் போட்ட பனியன்களை கொடுத்து பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைத்து வருவதாகவும் இதனை பார்க்கும் போது தனக்கு மிகுந்த வேதனையாக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், கூட்டணிக் கட்சிகளை பலமிழக்கச் செய்வது தான் பாஜகவின் தந்திரம் என்றும் அப்படித்தான் இன்று அதிமுக விவகாரத்தில் நடந்துகொண்டிருப்பதாகவும் திருமாவளவன் சாடினார்.

Thursday, October 28, 2021

கடமலைபுத்தூரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க நிர்வாகிகள் | Kadamalaiputhur Councilor Area | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைபுத்தூர் ஊராட்சியில், நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அச்சரப்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவரும், தி.மு.க-வின் அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.கண்ணன், செங்கல்பட்டு மாவட்டத்தின் 13-வது வார்டு மாவட்டக்குழு உறுப்பினர் வசந்தா கோகுலக்கண்ணன், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தின் 14-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பொன்மலர் சிவக்குமார் ஆகியோர் வாக்காளப் பொதுமக்களுக்கு தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்.

 

அப்போது ஊராட்சியில் உள்ள கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மூவரும் வாக்காளர்கள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் ஆகியோரிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

அதனை பெற்று கொண்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கபடும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்தனர்.

பின்னர், ஒன்றியக்குழு உறுப்பினர் பொன்மலர் சிவக்குமார், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் பலர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Monday, October 18, 2021

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் பிக் ரெய்டு | Ex-Minister Vijayabaskar Vigilance Raid Today | Vil Ambu News

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.

விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இவர் ஆட்சி காலத்தில் வருமானத்தி்ற்கு அதிகமாக 27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித் துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர்.

அவருக்கு சொந்தமான வீடுகள், குவாரிகள், அலுவலகங்கள், உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தீவிர சோதனை.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான ஆவணங்கள் சிக்கியது.

தற்போது சென்னையில் அவரது மனைவியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Sunday, October 17, 2021

6 மாதத்தில் காதல் ஜோடி தற்கொலை | நடந்தது என்ன.? | 6 Months Love marriage couple subside | Vil Ambu News

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடிக்கு உதவி செய்யாமல் இருந்துள்ளனர் அவர்களின் உறவினர்கள்.

வருமானமின்றி தவித்து இறுதியில் 6 மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகேயிருக்கும் கிளாமரம் கிராமத்தை சார்ந்த நாகராஜ் (27). இவர், அதே பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சார்ந்த தனலட்சுமி என்ற பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. இந்த காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக வீட்டினை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளது.


பின்னர், தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், தனலட்சுமி தற்போது கர்ப்பிணியான நிலையில், காதல் திருமண ஜோடியை இருதரப்பு பெற்றோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாகராஜுக்கும் உணவகத்தில் சரிவர வேலை இல்லாமல் போயுள்ளது. இதனால் குடும்பம் நடத்த வருமானம் இன்றி சிரமப்பட்டுள்ளனர். வருமானமின்றி சாப்பாட்டிற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். காதலித்து மணந்ததால் உறவினர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.

இதனைத்தொடர்ந்து, வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக தம்பதி தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுக்க, 6 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த தனலட்சுமி - கணவர் நாகராஜ் இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் வீட்டு கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாத காரணத்தால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கமுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கதவை உடைத்து வீட்டிற்குள் செல்கையில், தம்பதி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்களின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு:
மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104
சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050

Saturday, October 16, 2021

மின்வாரிய வேலைவாய்ப்பு | தமிழக இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ் | TNEB Requirements Latest News | Vil Ambu News

மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. முன்னுரிமையின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே அற்புரதப் புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மாதந்தோறும் மின் கட்டணத்தைக் கணக்கிடுவது தொடர்பாக தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு வீட்டுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாகவும், அதேசமயம் மின் கணக்கீட்டாளர் பணி நியமனம் தொடர்பாகவும் பரிசீலனையில் உள்ளது. இதில், எந்த அளவுக்குச் சாத்தியக்கூறுகள் உள்ளதோ, அதைப் பொறுத்து நிச்சயம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, கணக்கீடு செய்யக்கூடிய பணியாளர்கள் 50 சதவீத அளவில்தான் உள்ளனர்.

கடந்த 5 மாத ஆட்சிப் பொறுப்பேற்று 5 மாத காலத்தில் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 தேர்தல் வாக்குறுதிகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. படிப்படியாக அனைத்துத் தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

மின்கம்பிகள் அறுந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்படுவது துரதிர்ஷ்டவசமானது. வருங்காலத்தில் தரமான மின் கம்பிகள் அமைக்கப்பட்டு, அதற்கான கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதியதாக 9 துணை மின் நிலையங்களும், 15 துணை மின் நிலையங்களைத் தரம் உயர்த்தவும் 163 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. முன்னுரிமையின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். மின்வாரியம் 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. 

இதற்கு ஆண்டு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வட்டி செலுத்தக்கூடிய நிலையில், அதிகபட்ச வட்டிக்கு கடந்த ஆட்சியாளர்கள் கடன் வாங்கி உள்ளனர். இதெல்லாம் சீரமைக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இப்போது அவசர அவசியம் கருதி, எந்தெந்தப் பணியிடங்கள் தேவையோ அவை நிரப்பப்படும்".

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.


தோனி அப்படி என்ன மேஜிக் செய்தார்.? 10-வது ஓவருக்கு பின் நடந்தது என்ன...? Dhoni Secret Operation after 10th Over | Vil Ambu News

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.


இந்தப் போட்டியில் தோனி பேட்டிங் கூட செய்யவில்லை. இது வீரர்களின் திறமையால் கிடைத்தது இதில் தோனியின் பங்கு என்ன இருக்கு என சிலர் வேடிக்கையாகக் கூட கேட்கக் கூடும். ஆனால், ஒரு கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் போக்கு எப்படி மாறுகிறது என்பது உற்று நோக்குபவர்களுக்கு தெரியும் ஒரு கேப்டனாக தோனியின் பங்கு.

அப்படி என்னதான் செய்தார் தோனி!

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 192 ரன்கள் எடுத்திருந்தாலும், துபாய் பேட்டிங் மைதானம் என்பதால் வெற்றி வாய்ப்பு சம வாய்ப்புடனே இருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முக்கியமான கேட்சை தொடக்கத்திலேயே கோட்டை விட்டார் தோனி. இதுவே சென்னை அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பிறகு வெங்கடேஷ் ஐயர் அதிரடி காட்ட ஆட்டம் மெல்ல மெல்ல கொல்கத்தா பக்கம் சென்றது. ஆட்டத்தின் 10வது ஓவர் வரை சென்னை அணியின் ரசிகர்கள் இருந்த மனநிலையே வேறு. வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட பாதிக்கு கீழ் சென்றுவிட்டது.

அந்த அளவிற்கு கொல்கத்தா அணி தொடக்க வீரர்களான வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் ஆகியோர் ஆட்டம் இருந்தது. 10 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 88 ரன்கள் குவித்துவிட்டார்கள். இந்த இடத்தில் இருந்துதான் கேப்டன் தோனியின் வேலை தொடங்கியது.

ஆட்டத்தின் 5வது ஓவரை வீசி 11 ரன்கள் கொடுத்திருந்த ஷர்துல் தாக்கூரை பந்துவீச அழைத்தார் தோனி. அதற்கு முன்பாக பிராவோவும், ஜடேஜாவும் பந்துவீசிக் கொண்டிருந்தனர். தோனி வைத்த நம்பிக்கையை காப்பாற்றி அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை. அதன் பிறகு தோனி, கொல்கத்தா அணிக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. ஷர்துல் தாக்கூருக்கு அடுத்து உடனடியாக ஹசல்வுட்டை அழைத்தார். அந்த ஓவரிலும் ஒரு விக்கெட் வீழ்ந்தது.

தொடக்கத்தில் இருந்தே தீபக் சாஹர் ரன் மழை பொழிந்து கொண்டிருந்ததால் டெத் ஓவர் அவர் வீசுவதை தவிர்த்து 14வது ஓவரை வீச அழைத்தார் தோனி. அது தீபக் சாஹருக்கு கடைசி ஓவர். 9 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் சாஹர். இடையில் ஜடேஜாவையும் பந்துவீச வைத்தார். அந்த வரிசையில் தான் ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 15வது ஓவரில் தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹசன் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

ஷர்துல் தாக்கூரையும், ஹசல்வுட்டையும் அடுத்தடுத்து பந்துவீச வைத்து ஓவருக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இறுதியில் வெற்றியும் உறுதியானது.

10 ஓவர் வரை இருந்த நிலையில் அணி வீரர்களின் நம்பிக்கை சற்றே தளர்ந்து இருக்கும். கூட அணியில் நிகழ்ந்த தவறுகளும் கூட அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்திருக்கும். 

அவர்களை துவண்டுவிடாமல் உற்சாகப்படுத்தி நம்பிக்கையை இறுதிவரை தக்க வைக்க வேண்டியது ஒரு கேப்டனின் கடமை. அதனைத்தான் தோனியும் செய்தார்.

Friday, October 15, 2021

13 வயது சிறுமி பாலியல் கொலையில் திடீர் திருப்பம் | 13 Age girl died by sexual Harassment | Vil Ambu News

குத்தாலம் அருகே வில்லியநல்லூர் கிராமத்தில் 13 வயது சிறுமி மர்மசாவு விவகாரத்தில் ஒருவாரமாக நீடித்த மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது.

காதலித்த இளைஞரே உடலுறவுக்குப் பின் சிறுமியை வேட்டியால் கழுத்தை நெரித்து வாய்க்காலில் வீசிக் கொன்றது அம்பலமாகியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் ஷோபனா (13). குத்தாலம் அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த 7-ஆம் தேதி இரவு 9 மணி அளவில் அதே பகுதியில் வசிக்கும் அவரது மாமா பாலசுப்ரமணியன் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் பல்வேறு பகுதியில் தேடிய சிறுமியின் உறவினர்கள், அன்றிரவே குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடிய உறவினர்கள், சிறுமியின் மாமா பாலசுப்பிரமணியன் வீட்டின் பின்புறம் உள்ள வாய்க்காலில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி அணிந்திருந்த லெக்கின்ஸ் பேண்ட் கிழிந்து ரத்தக்கரை இருந்தது.

மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து, சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார், வில்லியநல்லூர் கிராமத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமியின் உடலை வாய்க்காலில் இருந்து உறவினர்கள் வீட்டிற்கு தூக்கி வந்துவிட்டதால் வாய்க்காலில் தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரிலேயே போலீசார் தொடர் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியினர் சிலரை போலீசார் கண்காணிப்பு வளைத்தில் கொண்டுவந்து அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதனிடையே மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி சிறுமியின் சந்தேக மரணம் வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. 

இந்த தகவல் அறிந்த அதே தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பிரபாகர் என்ற இளைஞர் (25) அங்கிருந்து நழுவி பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்றபோது, போலீசார் அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அச்சிறுமியின் உறவினரான பிரபாகர் கடந்த 3 மாதங்களாக அச்சிறுமியை காதலித்து வந்ததும், அச்சிறுமியுடன் பலமுறை உடலுறவு கொண்டுள்ளதும் தெரியவந்தது. சம்பவத்தன்று சிறுமி ஷோபாவை தனியாக வரச்சொன்ன பிரபாகர் சிறுமியுடன் உடலுறவு கொண்டுள்ளார். பின்னர், அப்பகுதி இளைஞர்களுடன் சிறுமி சகஜமாக பேசுவதை கண்டித்துள்ளார். 

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது வேட்டியால் சிறுமியின் கழுத்தை நெறித்துள்ளார். இதில் மயக்கமடைந்த சிறுமியை வாய்க்காலில் தூக்கிப்போட்டுள்ளார். இதில், வாய்க்காலில் கிடந்த சிறிது நீரில் சிறுமி மூச்சுமுட்டி உயிரிழந்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறிய பிரபாகர், உறவினர்களுடன் சேர்ந்து தானும் சிறுமியை தேடுவது போல் நடித்துள்ளார்.

பிரபாகரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செய்து நாகப்பட்டினம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இதன்மூலமாக கடந்த ஒரு வாரமாக நீடித்துவந்த சிறுமியின் மரணத்தில் நிலவிய மர்மத்துக்கு விடை கிடைத்துள்ளது.

Monday, October 11, 2021

TNPSC Group 4 Latest News | Vil Ambu News

தமிழகத்தில் அரசு துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சு போன்ற 7 பணியிடங்களுக்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.


கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் அதே ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் இதற்கான பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 17 ஆம் தேதி வரை கிராம நிர்வாக இளநிலை உதவியாளர் மற்றும் வரி வசூலிப்பவர் போன்ற பணிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அந்த கலந்தாய்வில் மொத்தம் 6007 பணியிடங்களில் 5,798 ஆகிய பணியிடங்களில் மட்டுமே நிரப்பப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர் 250 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 2 முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது இந்த கலந்தாய்வில் தட்டச்சர் பணிக்கான 221 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மேலும் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணிக்கான 430 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணிகளுக்கு இன்றும், நாளையும் கலந்தாய்வு நடைபெறும். மேலும் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, October 10, 2021

ரூ.1000 விரைவில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்கப்படும் -அமைச்சர் கே. என்.நேரு உறுதி | K. N. Nehru Latest News | Vil Ambu News

திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தை அருகே மாநகராட்சி சார்பாக ரூபாய் 393 இலட்சம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 2- நவீன சாலை சுத்தம் செய்யும் வாகனங்கள் ( Road sweeping Machine- 2nos) மற்றும் திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்கும் பணிக்கு வாங்கப்பட்டுள்ள 100 மின்கல வாகனத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகர தூய்மை பணி சேவைக்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், திருச்சி கம்பரசம்பேட்டை மற்றும் நொச்சியம் இடையே இரண்டு தடுப்பணைகள் கட்ட மத்திய அரசுக்கு திட்ட கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பு, 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாது நகர்புற பகுதிகளையும் ஜல் ஜீவன் திட்டத்தில் இணைக்க வேண்டும்.

விரைவில், குடும்பத் தலைவிகளுக்கு, 1000 ரூபாய் வழங்கப்படும். தி.மு.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். குடும்பத் தலைவிகளுக்கு, 1000 ரூபாய் வழங்குவது குறித்து முதலமைச்சர் முறைப்படி அறிவிப்பார். உள்ளாட்சித் தேர்தல் உள்ளபடியே நேர்மையாக நடத்தப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். பின்பு அங்கன்வாடியில் பணிபுரிந்து இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை நான்கு பேருக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

எச். ராஜா எங்கிருந்தாலும் வரவும் - அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதிலடி | Where is H Raja..? - Minister PK Sekarbabu Calling..! | Vil Ambu News

குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமித்த நிலம் இன்னும் நான்கு வார காலத்திற்குள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளது, குயின்ஸ்லாந்து பற்றி சவால்விட்ட அரசியல் கட்சி பிரமுகர் இப்போது என்ன சொல்ல போகிறார் என எச்.ராஜாவை அமைச்சர் சேகர்பாபு சாடினார். 


சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள பாப்பா சத்திரம் என்ற ஊரில் காசிவிஸ்வநாதர்க்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை அமைச்சர் சேகர்பாபு 24 மணிநேரத்தில் மீட்டால் இந்து அறநிலைத்துறை பற்றி இனி பேச மாட்டேன் என்று எச்.ராஜா அமைச்சருக்கு சவால் விடுத்திருந்த நிலையில், இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு எச். ராஜாவுக்கு இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட கோயில்கள் மேம்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். சென்னை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 1206 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் திருப்பணி, திருத்தேர், திருக்களம், மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

திருக்கோயில் பணியாளர்கள் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளின் வாயிலாக, கோயில்களில் நிலவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட வாரியாக கோயில்களின் தற்போதைய நிலை மற்றும் தேவை குறித்த தரவுகள் சேமிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் எத்தனை தங்கச் சிலைகள் உள்ளது என செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், சிலைகளின் பாதுகாப்பு காரணமாக தங்கத்தாலான சிலைகளின் எண்ணிக்கையை கூறமுடியாது என்றார், நிருபர்களுக்கு தேவை என்றால் குறிப்பிட்ட கோயில்களில் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

அதேபோல் குயின்ஸ்லேண்ட் எப்போது கைப்பற்றப்படும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இது குறித்து அரசியல் பிரமுகர் ஒருவர் சவால் விடுத்திருந்தார், தற்போது இந்து சமய அறநிலைத்துறை குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்த நிலத்தை நான்கு வாரங்களுக்குள் கைப்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போது அந்த அரசியல் பிரமுகர் என்ன சொல்லப் போகிறார் என கேள்வி எழுப்பிய அமைச்சர் சேகர் பாபு, திராவிட முன்னேற்றக் கழக அரசு சொல்வதை தான் செய்யும், செய்வதை தான் சொல்லும் என்றார். அதேபோல் கோவையில் கோயில் நிலங்களை PSG கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமித்து பயன்படுத்துவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனடியாக அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.