வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: "மிரட்டுகிறார்கள்".. முக்கிய பிரமுகர்கள்தான் காரணம்.. திமுக அரசு மீது பாய்ந்த எடப்பாடி பழனிசாமி | EPS angry on MKS | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 10, 2021

"மிரட்டுகிறார்கள்".. முக்கிய பிரமுகர்கள்தான் காரணம்.. திமுக அரசு மீது பாய்ந்த எடப்பாடி பழனிசாமி | EPS angry on MKS | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

திமுகவினரின் கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகளின் பணியிட மாறுதல் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அதிகாரிகள் சுதந்திரமாக மக்கள் பணியாற்றவும், அதிகாரிகளை மிரட்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.


இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"அ.தி.மு.க.வின் 30 ஆண்டுகால நல்லாட்சி காலத்திலும், குறிப்பாக, 2011 முதல் 2021 வரை நடந்த அம்மாவின் ஆட்சி மற்றும் அம்மாவின் அரசிலும் நேர்மையான அரசு அதிகாரிகள் ஊக்குவிக்கப்பட்டார்கள்.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கொள்ளை அடிக்கும் ஆளும் கட்சியினர் மீது, சட்டபூர்வமாக, நேர்மையாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், தங்களுக்கு சாதகமாக செயல்படாத அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும், செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனை, எனது அறிக்கைகளின் வாயிலாக அடிக்கடி சுட்டிக் காட்டி உள்ளேன்.


ஆனாலும், தி.மு.க. அரசின் ஆட்சியில், தொடர்ந்து அதிகாரிகள், ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களால் மிரட்டப்பட்டு வருவது தொடர்கதையாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில், கல்குவாரிகளில் முறைகேடாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளம் கடத்தப்பட்டுள்ளதை கண்டறிந்து இந்த கடத்தலில் ஈடுபட்ட ஆளும் தி.மு.கவினருக்கு சுமார் 20 கோடி ரூபாய் அபராதம் விதித்த சப்-கலெக்டர், லாரிகளை பறிமுதல் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும், கடத்தல் கும்பல்களின் செல்வாக்கால், மாவட்ட ஆளும் கட்சி பிரமுகர்களின் அழுத்தத்தினால், கடந்த வாரம் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம், கூடங்குளம் மற்றும் இருக்கன்குடி பகுதிகளில் பல்வேறு குவாரிகள் செயல்படுகின்றன. இதில் தி.மு.க. பிரமுகர்களுக்கு சொந்தமான குவாரிகளில், புவியியல் துறையில் பெறப்பட்ட நடை சீட்டு (பெர்மிட்) அளவைவிட, அதிக அளவு கனிமங்கள் வெட்டி கடத்தப்படுவதாக அரசு துறைகளுக்கு புகார்கள் வந்தன.

பொதுமக்கள் அளித்த புகாரின்படி, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, கடத்தல் லாரிகளை கனிமங்களோடு பறிமுதல் செய்த தோடு, பினாமி பெயர்களில் நடத்தும் குவாரிகளுக்கு கோடிக் கணக்கில் அபராதம் விதித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதன் காரணமாகவே சப்-கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பணியிட மாறுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

அடுத்த நிகழ்வாக ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் சந்தோஷ்குமாரை ஆளும் கட்சி பிரமுகர்களும், தி.மு.க.வைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களும் செய்யாத பணிகளுக்கு போலியாக பில்கள் தயாரிக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர் என்றும், கடந்த புதன்கிழமை மதியம் (8-ந்தேதி) ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தொலைபேசி மூலம் மீண்டும் அவருக்கு உச்சகட்ட நெருக்கடி கொடுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் உச்சத்தில், உதவிப்பொறியாளர் சந்தோஷ்குமார் காவல்கிணறு அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

உதவிப் பொறியாளர் சந்தோஷ்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசு அலுவலர் சங்கங்கள் திருநெல்வேலியில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போன்று, கடந்த அக்டோபர் மாதம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன், தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் முறைகேடாக டெண்டர் வைக்கச் சொல்லி தன்னை வற்புறுத்துவதாகவும், எனவே தனக்கு 60 நாட்கள் ஈட்டா விடுப்பு வழங்கக் கோரியும், மேலும் தன்னை உடனடியாக வேறு இடத்திற்கு பணிமாறுதல் செய்யக்கோரியும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு 28.10.2021 அன்று கடிதம் எழுதியதை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. நானும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியிருந்தேன்.

அதே போல், ஆளும் கட்சியினருடைய அழுத்தத்தின் காரணமாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், வெங்கடாஜலம், இந்திய வனப்பணி அதிகாரியின் (ஓய்வு) மர்ம மரணத்தை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரியிருந்தேன். இதுபோல் தமிழ்நாடு முழுவதும், இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், தைரியமாக ஒருசிலர் அளித்த புகார்கள் மீதோ, அல்லது நடைபெற்ற சம்பவங்கள் மீதோ இந்த அரசு இதுவரை எந்த விதமான விசாரணையையும் மேற் கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதாக செய்திகள் வருகின்றன.இதனால் தமிழகத்தில் அனைத்து அதிகாரிகளும் ஒருவித அச்ச உணர்வுடன் பணிபுரிந்து வருவதாக அரசு அலுவலர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர், சந்தோஷ்குமார் மர்ம மரணத்தை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும், தவறிழைத்தவர்கள் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், தி.மு.க.வினரின் கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகளின் பணியிட மாறுதல் உத்தரவை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அ.தி.மு.க. ஆட்சியின் போது அதிகாரிகள் எப்படி அச்ச உணர்வின்றி, நேர்மையாக மக்கள் பணியாற்றினார்களோ, அது போல் இப்போதும் அதிகாரிகள் சுதந்திரமாக மக்கள் பணியாற்றவும், சட்டத்தின் ஆட்சியினை நிலை நிறுத்தவும், அதிகாரிகளை அதிகாரிகளை மிரட்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment