வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேலைக்குச் செல்லும் பெண்களின் உடல்நலனில் அக்கறை தேவை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 09, 2018

வேலைக்குச் செல்லும் பெண்களின் உடல்நலனில் அக்கறை தேவை!“கடந்த கால் நூற்றாண்டில் மட்டும் வீடு, அலுவலகம் என இரட்டைப் பளுவைச் சுமக்கும் வாழ்க்கைமுறையால் இந்தியாவில் ஆண்களைவிடப் பெண்களுக்கு ஆரோக்கியப் பிரச்சினைகள் தலைதூக்குவது பல மடங்கு அதிகரித்துள்ளது” என்கிறது அசோசேம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை. இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘உலகப் பெண்கள் தின’த்தை முன்னிட்டு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்திவரும் பெண்களின் உடல்நலம் குறித்த இந்த எச்சரிக்கை எளிதில் புறந்தள்ளத்தக்கதல்ல!


நாட்டின் பத்து பெரிய நகரங்களில், 120 கார்ப்பரேட் நிறுவனங்களில், 30-லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட 2,800 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முக்கால்வாசிப் பேருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ‘தொற்றா நோய்கள்’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், அதீத கொழுப்பு, நீரிழிவு, இதயநோய், சிறுநீரக நோய், புற்றுநோய், முதுகுவலி, மன அழுத்தம், ரத்தசோகை, ஹார்மோன் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு 100-ல் இருவர்கூட தொடக்கத்திலேயே சரியான சிகிச்சைக்குச் செல்வதில்லை என்று சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, வேலைப் பளு, நேரமின்மை, நோய் அறியாமை போன்ற காரணங்களால் பெண்கள், மருத்துவரிடம் செல்லாமல், கைப்பக்குவம் பார்த்துக்கொண்டு சமாளிக்கின்றனர் என்றும் கவலை தெரிவித்திருக்கிறது.

என்ன பிரச்சினை?
ஆரோக்கியத்துக்கு அடிப்படை - நேரத்துக்கு உணவு. ஆனால், வேலைக்குப் போகும் பெண்களில் பெரும்பாலானோர் காலை உணவைத் தவிர்க்கின்றனர். ஊட்டச்சத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கிடைத்த உணவைக் கொறித்துவிட்டு அலுவலகம் செல்கின்றனர் அல்லது அலுவலக உணவகங்களில் கிடைக்கும் நொறுக்குத்தீனிகளை வாங்கி உண்கின்றனர். இந்தப் பழக்கம் அல்சரில் தொடங்கி ரத்தசோகை வரை பல பாதிப்புகளுக்குக் காரணமாகிறது. இவற்றோடு பயணக் களைப்பும் சேர்ந்துகொள்ள, உடல்சோர்வும் உளச்சோர்வும் பெண்களை ஆட்கொள்கின்றன.
வார நாட்களில் சரியாகச் சாப்பிட முடியாத அவர்கள் வார இறுதியில் வெளியிடங்களுக்குச் சென்று துரித உணவுகளைச் சாப்பிடுகின்றனர்.
 

இவற்றில் மிதக்கும் எண்ணெயும் உப்பும் அதீத கொழுப்பும் உடற்பருமனுக்குத்தான் வழிசெய்கிறது. அவர்களால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை என்பதும் இதற்கு ஒரு காரணம். இந்த உடற்பருமன் பிரச்சினை உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், ஹார்மோன் பிரச்சினை போன்ற ஆபத்தான நோய்களுக்கும் அடித்தளம் இடுகிறது என்பது கவனிக்கத்தக்கது. 30 ஆண்டுகளுக்கு முன்புவரை மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை பெண்களுக்கு 50 வயதுக்கு மேல் மாதச்சுழற்சி நின்ற பிறகுதான் ஏற்பட்டது. இப்போதோ இந்த இரண்டு நோய்களும் 30 வயதிலேயே ஏற்படுவதுதான் இதற்கு சாட்சி.


மார்பகப் புற்றுநோய்
சமீப காலத்தில் வேலைக்குப் போகும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதற்கும் அவர்களுடைய வாழ்க்கைமுறைதான் காரணமாகிறது. வேலை கிடைத்த பிறகே திருமணம் செய்துகொள்வது என்று பெரும்பாலான பெண்கள் திட்டமிடுகின்றனர். இதனால், அவர்களுக்குத் திருமண வயதும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதும் தள்ளிப்போகிறது. 30 – 35 வயதில் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும், பணி நிமித்தம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கத் தவறுபவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய்/கருப்பை வாய்ப் புற்றுநோய் வரும் வாய்ப்பு மற்றவர்களைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. இன்னும் சிலருக்குக் குழந்தையின்மை பிரச்சினையும் உண்டாகிறது.


வேலைக்குப் போகும் பெண்களுக்குப் பணிச்சுமை தொடர்பான அழுத்தங்கள் இருக்கும். வீட்டில் குழந்தைகள் இருந்தால், வயதானவர்களைக் கவனிக்க வேண்டியிருந்தால் இன்னும் அழுத்தங்கள் அதிகமாகும். இவை எல்லாம் சேர்ந்து அவர்கள் உறக்கத்தைக் கெடுக்கும். இப்படிப் பல்வேறு பிரச்சினைகள் அவர்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். அதேநேரத்தில், கணவருக்கோ, குழந்தைக்கோ இந்தப் பிரச்சினைகள் ஏற்படும்போது முன்னுரிமை கொடுத்துக் கவனிப்பதுபோல் தங்களுக்குள்ள உடல்நலப் பிரச்சினைகளை அவர்கள் உடனே கவனிப்பதில்லை. ஏற்கெனவே சுமக்கும் அலுவல் சுமை, குடும்பச்சுமை ஆகியவற்றோடு இவற்றையும் சுமந்துகொள்ளப் பழகிக்கொள்கின்றனர். இது அவர்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைத் தாமதமாகவே புரிந்துகொள்கின்றனர்.


என்ன செய்யலாம்?
முதலில் ஆரோக்கிய உணவில் அக்கறை வேண்டும்.
நேரத்தோடு சாப்பிடும் பழக்கம் வேண்டும். காலை உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கேன்டீனில் சாப்பிடும் சிறுதீனிகளுக்குப் பதிலாக வீட்டிலிருந்து பழங்களை எடுத்துச் சென்று சாப்பிடலாம். அலுவலகத்தைச் சுற்றியோ, வீட்டைச் சுற்றியோ நடக்கலாம். எந்த வழியிலும் உடற்பருமனுக்கு இடம் கொடுக்கக் கூடாது. திட்டமிட்டுப் பணி செய்வதும், எதிலும் சரியான ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பதும் தேவையில்லாத பரபரப்பைக் குறைத்துவிடும். மன அழுத்தம் விடைபெறும். ஆரோக்கிய வாழ்வுக்குப் போதிய ஓய்வும் உறக்கமும் அவசியம். டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதும் நல்லது. பிடித்த உறவுகளுடன் உறவாடினால் மனம் லேசாகும்.


நிறுவனங்களின் பங்கு
வேலைக்குப் போகும் பெண்களின் ஆரோக்கியத்தைக் காப்பதில் அவர்கள் பணிசெய்யும் நிறுவனங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. பெண்கள் இரவுச் சூழல் பணிகளைக் குறைத்துக்கொள்வது, பெண்களுக்கான கழிவறை, ஓய்வறை, உடற்பயிற்சி அறை, உள் விளையாட்டு அரங்கம் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துதருவது, அன்றாட ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு இலவச மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது, வருடந்தோறும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுசெய்வது, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவக் குழுவினர் நிறுவனத்துக்கே வந்து ரத்த அழுத்தம் அளவிடுவது, ரத்தச் சர்க்கரை/கொழுப்பு அளவுகளை எடுப்பது, இசிஜி, எக்கோ பரிசோதிப்பது போன்றவற்றுக்கும் ஏற்பாடுசெய்தால், பல உடல்நலக் கேடுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் களைந்துவிடலாம். இதன் மூலம் பெண்களின் உடல் நலனை உறுதிப்படுத்தலாம். குடும்பத்தின் தூண்களாக விளங்கும் பெண்களின் நலன் பாதுகாக்கப்படும்போது, ஒட்டுமொத்த நாட்டுமக்களின் நலனும் மேம்படும்!


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment